அழகர்சாமியின் குதிரை
நம்ம தேனி மாவட்டத்து மல்லையாபுரத்தில் 3 வருஷமா ஊருக்கு தெய்வமான அழகருக்கு திருவிழா எடுக்காம போனதால மழை இல்லாம ஊரே பஞ்சத்தில் தவிக்க, உள்ளூர் கோடங்கி மேல வந்து இறங்குன அழகர் உத்தரவுப்படி ரொம்ப சிறப்பா திருவிழாவை நடத்த ஊர் கூடி முடிவெடுக்குது...
இந்த நேரத்துல அழகரோட குதிரை காணாத போனா என்ன ஆகும்?
அழகர்சாமியின் குதிரை...
மதுரை, தேனி போன்ற தென்மாவட்டங்களை சேர்ந்த கதை என்றாலே கத்தி, குத்து, பழி, துரோகம் என்று பரவலாக 'வெள்ளைமனசுக்காரப் பயலுக' ஊருக்கு கங்கணம் கட்டி கொண்டு ரத்தச் சிவப்பில் வண்ணம் அடித்து வந்த அண்மைக்கால தமிழ் சினிமாவின் மனோபாவத்தை 'வெள்ளாவியில வச்சு' வெளுத்து வாங்குகிறது சுசீந்திரன் இயக்கித் தந்த பாஸ்கர் சக்தியின் கதையாலாகிய இந்த படம்.
ஊரு ஒரு வழியில போனா தான் வேற வழியில போற இளந்தாரிப் பயலுக, தோள்பட்டை வரை நீண்டு தொங்கும் தண்டட்டி அணிந்த கிழவி, கிடைக்குற gapல எல்லாம் கடா விருந்து காணும் ஊர் மைனர், சமயம் பார்த்து ஊர்பயலுக காதில பூ சுத்தும் உள்ளூர் கோடங்கி, ஏழு வயசுலேயே எட்டு ஊருக்கு நீளும் வாயும் வாலும் வெச்சிகிட்டு சுத்தும் ஆழாக்கு அளவு சின்ன பயலுக பட்டாளம்.... ஊருடைய உயிர்நாடியை பிசகாமல் வலக்கரம் கொண்டு மேடையில் ஏற்றி அழகு பார்க்கிறது படம்.
திருவிழாவிற்கு கொடை வசூலிக்க வரும் ஊர் பெரியவர்களிடம், வீட்டுத்திண்ணையில் புத்தகம் வாசிப்பது போல் ஜாடை-மாடையாக
"மாமனா மச்சானா? உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி?" என்று கேட்கும் தொனியில் "கிளம்பு கிளம்பு" என்று சிக்னல் கொடுக்கும் சிறுவனில் மிளிர்கிறது, நம்ம ஊரு நாசூக்கு.
குதிரையை காணோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் உள்ளூர் பகையாளி முதல் வடநாட்டு அயல்நாட்டு ஆசாமி வரை அனைவருக்கும் பொறி வைப்பது வெள்ளந்தி காமெடி.
மரக்குதிரை போய் நிஜக்குதிரையே வந்ததும், அழகரின் வாகனம் இது தான் என்று ஊரை நம்ப வைக்கும் Duplicate மலையாள மந்திரவாதி , side gapல மரத்துக்கடியில மடம் தொறந்து ஊர் மக்கள் கால்நடைய திருநீறு கொடுத்தே வளைச்சு போடுகையில் சக்கை போடுகிறார்!
போலிச் சாமியாரின் அமோக வசூலைக் கண்டு "நானும் உங்க departmentல சேர்ந்துக்கறேனே சாமி" எனும் இடத்திலும், திருமணத் தடை நீக்க வேண்டும் பெண்ணிடமும் அவளின் அம்மாவிடமும் 'அர்த்த சாம' பூஜைக்காக பூ, பழம், ஊதுபத்தி, ஜாங்கிரி என பட்டியல் போடும் இடத்திலும் ரகளை பண்ணுகிறார் படத்தில் சந்திரன் பாத்திரத்தில் வரும் "வெண்ணிலா கபடி குழு- பரோட்டா புகழ்" சூரி!
காவித்துணி+மாலை சகிதம் உள்ளூர் 'ராசாத்திகளை' கணக்கு பண்ணும் மைனர், குதிரை குளம்படியில் 'வானம் பார்த்த பூமி' ஆகும் இடம் "அரசன் அன்று கொல்வான், குதிரை நின்று கொள்ளும்" என்கிற புதுமொழிக்கு புதுவழி!
அது சரி, அழகர்சாமியின் குதிரையை பொறுத்தமட்டில், யாருக்கு ராஜபாட்டையில் சவாரி?
காணாமல் போன தன் குதிரை தனக்கு மீண்டு கிடைக்கும் தருவாயில் ஊர் பூண்ட திருவிழாக் களையை களைய மனமில்லாது விட்டு கொடுக்கும் குதிரைக்காரன் அழகர்சாமியா?
திருடனே ஆனாலும் ஊரே வசைந்தாலும் அவன் பசிக்கும் சோறு போடும் விதவை அக்காவா?
விரும்பியவளையே சாதித் தடை தாண்டி சொன்னபடி மணந்து, "என் படிப்பு போதும் சார்..இவளை நான் காப்பாத்துவேன்" என்று யதார்த்தமான காதல் சொல்லும் ராமகிருஷ்ணனா?
மனது கேட்காமல் தான் களவாடிய பொருளை தானே திருப்பி வைக்கும் சமயம் அகப்பட்டு "அய்யா நீங்களா இப்படி செஞ்சீங்க?" எனும்போது சிறுபிள்ளையாய் கலங்கும் ஊர் ஆசாரியா?
உடையவன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் ஊழிகூத்தாடும் வெள்ளைப் புரவியா?
"சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணினா அந்த சாமிக்கே அடுக்காது...இனி இந்த ஊரில் மழையே பெய்யாது" என்று சொல்லி முடிப்பதற்குள் வானத்தை திறந்து மழையால் பூமி நனைக்கும் ஊர் தெய்வமாகிய அழர்கர்சாமியா?
"சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணினா அந்த சாமிக்கே அடுக்காது...இனி இந்த ஊரில் மழையே பெய்யாது" என்று சொல்லி முடிப்பதற்குள் வானத்தை திறந்து மழையால் பூமி நனைக்கும் ஊர் தெய்வமாகிய அழர்கர்சாமியா?
எல்லாவற்றிற்கும் மேலாக ஓசைகளும் மௌனமும் கலந்து உயிர்விசையை மீட்டு எழுப்பும் தாயின் ஸ்பரிசம் போன்ற இளையராஜாவின் இசையா?
யார் இவர்களில் இந்தப் படத்தின் Hero?
இந்த கேள்வியில் அடங்கி இருக்கிறது "அழகர்சாமியின் குதிரை" படத்துடைய ஆர்ப்பரிப்பில்லாத வெற்றி.
இது யாரையும் impress செய்ய எடுக்கப்பட்ட படம் அல்ல. ஒரு சமுதாயத்தின் யதார்த்தங்களை வேருக்கு பங்கமின்றி உலக அரங்கில் நட்டு வைத்த ஆலமரத்தின் இளங்கன்று.
"கோ", "எங்கேயும் காதல்" போன்ற படங்கள் City Centerலயும் Express Avenueவிலும் Pizza burger கடிச்சிட்டு City figureகளை ரசித்துக் கொண்டே Politics, Movies என்று அளவளாவும்வகையறா...அது ஒரு taste...
"அழகர்சாமியின் குதிரை" பொழுது சாய்ஞ்ச பிறகு தாவணி தேவதைகள் நடமாடும் கடைத்தெருவின் கோடியில், கரகர ரேடியோவில் 80'களில் வந்த இளையராஜா பாட்டை கேட்டுக்கிட்டே தென்னமர காத்து வீச, டிபன் சென்டரில் சுடச் சுட, பசி தீர பரோட்டா சாப்பிடும் வகை....
அழகர்சாமியின் குதிரை- சுவை தெரிஞ்சவனுக்கு தேன்மிட்டாயாக சாப்பிட்டு முடித்து நெடுநேரம் ஆன பின்னும் சப்பு கொட்ட வைக்கும்!
Comments
இயல்பான கதை வசனம் பாடல்கள் நடிகர்கள் என
அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் படம்
என்றால் மிகையாகாது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்