யதார்த்தங்களின் நாயகன்.
இது சற்றே தாமதமான பதிவு என்றாலும் என் உளமார்ந்த பதிவு. புத்தகங்களும் திரைப்படங்களும் அதிக ஆதிக்கம் செலுத்திய மனச்சூழல் என்னுடையது. அந்த வகையில் யாரோ ஒருவரின் மரணம் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத ஓர் இழப்பு திரைச்சிற்பி பாலு மகேந்திராவின் மறைவு. பாலு மகேந்திராவின் அறிமுகம் முதன்முறையாக 1998 சன் டிவி'யில் ஒரு முன்னிரவு வேளையில் 'மூடுபனி' திரைப்படம் பார்த்த போது கிடைத்தது. அதற்கு முன்பே 'மூன்றாம் பிறை' பல முறை கண்டிருந்தும் இயக்குனர் என்ற சிம்மாசனத்தின் அதிகாரம் புரிந்த பின்னே பார்த்த முதல் சில படங்களில் ஒன்றாக 'மூடுபனி' அமைந்தது. அன்றிலிருந்து பாலு மகேந்திரா படம் என்றாலே அதில் ஏதோ ஒரு அசாத்தியத்தை எதிர்பார்க்கும் ஒரு வழக்கம் ஒட்டிக் கொண்டது. வளர வளர சில நுணுக்கங்கள் அவரது திரைப்படங்களில் பிடிப்பட்டன. குறைந்த கதைமாந்தர்களை கொண்ட ஆழமான கதைச் சூழலுக்குள் 3 மணிநேரம் கட்டுண்டு கிடந்த காலங்கள் அவை. நிறைய படங்களில் கதைக்களம் நிகழும் ஊரும் அங்கு நிலவும் பருவச் சூழலும், இளையராஜாவின் இசையும், சில நேரங்களில் நிசப்தமும் கூட உயிருள்ள கதாபாத்திரங்களாக...