வைகாசி மாத மாலைத் தென்றல் மயிலிறகாய் வருடியது. அன்று சஷ்டி ஆதலால் கணபதி காலனியின் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வேலவனுக்கு சர்வாலங்காரத்துடன் ஆரத்தி சேவையும் பூஜையும் ' ஜே ஜே ' என நடந்து கொண்டிருந்தது. அரச மரக் காற்றும் ஆலயமணி ஓசையுமாய் மனம் ஒருவகை அமைதியோடு லயித்திருக்க , சிற்ப மண்டபத்து தூணொன்றில் கண் மூடி ரசனையில்ஆழ்ந்திருந்த சிவகாமியை "என்ன மாமி , மௌன சாதகமா ?" என்ற குரல் எழுப்பியது. சாய்ந்திருந்த தூணிலிருந்து சற்றே அகன்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சிவகாமி. அழைத்தது சாக்ஷாத் அலமேலுவே தான். கணபதி காலனியின் பிரத்யேக ரேடியோ சர்வீஸ் ; அலமு காதிற்கு போகாமல் எந்த நடப்பு நிகழ்வும் காலனிக்குள் நுழைவதும் இல்லை , தாண்டுவதுமில்லை. " என்ன அலமு , புதுப் புடவையா ? ரொம்ப நல்லா இருக்கே..வா இப்படி. சுவாமி தரிசனம் முடிஞ்சதா ?" என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு இடம் செய்து கொடுத்து தள்ளி அமர்ந்து கொண்டாள் சிவகாமி. " ஹூம்ம்ம்..." என்று பீடிகையுடன் அலமு ஆரம்பிக்கும் பொழுதே சாவித்திரியும் பத்மாவும் "தரிசனம் ஆச்சா ?" என்று வ...