குலதெய்வம்

வைகாசி மாத மாலைத் தென்றல் மயிலிறகாய் வருடியது. அன்று சஷ்டி ஆதலால் கணபதி காலனியின் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வேலவனுக்கு சர்வாலங்காரத்துடன் ஆரத்தி சேவையும் பூஜையும் 'ஜே ஜே' என நடந்து கொண்டிருந்தது. அரச மரக் காற்றும் ஆலயமணி ஓசையுமாய் மனம் ஒருவகை அமைதியோடு லயித்திருக்க, சிற்ப மண்டபத்து தூணொன்றில் கண் மூடி ரசனையில்ஆழ்ந்திருந்த
சிவகாமியை "என்ன மாமி, மௌன சாதகமா?" என்ற குரல் எழுப்பியது.

சாய்ந்திருந்த தூணிலிருந்து சற்றே அகன்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சிவகாமி. அழைத்தது சாக்ஷாத் அலமேலுவே தான். கணபதி காலனியின் பிரத்யேக ரேடியோ சர்வீஸ்; அலமு காதிற்கு போகாமல் எந்த நடப்பு நிகழ்வும் காலனிக்குள் நுழைவதும் இல்லை, தாண்டுவதுமில்லை. 

"என்ன அலமு, புதுப் புடவையா? ரொம்ப நல்லா இருக்கே..வா இப்படி. சுவாமி தரிசனம் முடிஞ்சதா?" என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு இடம் செய்து கொடுத்து தள்ளி அமர்ந்து கொண்டாள் சிவகாமி. 

"ஹூம்ம்ம்..." என்று பீடிகையுடன் அலமு ஆரம்பிக்கும் பொழுதே சாவித்திரியும் பத்மாவும் "தரிசனம் ஆச்சா?" என்று வினவியபடியே இவர்களோடு அமர்ந்து கொண்டார்கள்.

கூட்டம் சேர்ந்து போனது அலமுவிற்கு தோதாக போகவே கதாகலாக்ஷேபம் செய்ய போகும் தோரணையோடு பேச்சை துவங்கினாள். 

"ஆமாம் மாமி, புதுப் புடவை தான். நாத்தனார் எடுத்து கொடுத்தது. பதிலுக்கு நேத்து இவரை அழைச்சுட்டுப் போய் நாலு கிராமுக்கு அவ குழந்தைக்கு கோல்ட் ப்ரேஸ்லெட் வாங்கிட்டு சமன் செஞ்சுட்டா மகராசி. அது கிடக்கட்டும், ஒரு புது அப்டேட் நம்ம காலனி காத்துல அடிபடறதே, கேட்டீங்களா?" என்றாள்.

"உனக்கு தெரியாததா எங்களுக்கு தெரிஞ்சுட போகுது? அதையும் நீயே சொல்லேன்" என்றாள் பத்மா.

"ஆமாமா. நானே சொன்னால் தான் எனக்கும் ஒரு திருப்தி இருக்கும். எதுவும் மிஸ் ஆகிட கூடாது பாருங்கோ.
நம்ம காலனில சகுந்தலா அபார்ட்மென்ட்ஸ் வசந்தா மாமி தெரியுமில்லையா? அதே அபார்ட்மென்ட்ல அவங்களுக்கு இன்னொரு வீடு இருக்கறதும் அதை அவங்க வாடகைக்கு விட்டிருப்பதும் தெரியும் தானே? அந்த வீட்டில் குடியிருக்கும் மைதிலி தான் கதையின் நாயகி..." என்று இழுத்தாள் அலமு.

"யார், இப்போ மஞ்சள் சுடிதாரில் மாமியாரோட கைய பிடிச்சு அழைச்சிட்டு போனாளே, கோயில் வாசல் கிட்ட ஒரு சின்ன பொண்ணு, அவள் தானே? ரொம்ப சாந்தமான முகம். வயிறு லேசா மேடிட்டு இருந்ததே...ஐ தின்க் ஷி இஸ் இன் தி பேமிலி வே." என்றாள் சாவித்திரி.

"உங்களுக்கு நூறு மார்க் சாவித்திரி மாமி. அவளே தான். இன்னொரு நூறு மார்க்; யூ ஆர் கரெக்ட், ஷி இஸ் இன் தி பேமிலி வே. அங்கே தான் ட்விஸ்ட்!

மைதிலி வீட்டில் அவளும் அவளோட மாமியாரும் மட்டும் தான் இப்போ இருக்காங்க என்பதும், அவளோட ஹஸ்பண்ட் வாசு துபாயில் ஒரு கான்ட்ராக்ட் வேலையில் இருக்கிறார் என்பதும் தெரிந்த விஷயம்.

தெரியாத செய்தி என்னன்னா வாசு துபாய்க்கு போய் அஞ்சு மாசம் ஆகிறதாம்; ஆனால் மைதிலியோ மூணு மாச கர்ப்பம். செயற்கை முறை கருத்தரிப்பாம். யாரோ முகம் தெரியாத பணக்கார தம்பதியோட வாரிசுக்கு இவள் வாடகைத் தாயாம். அவங்களுக்கும் இவள் யார், என்ன விபரம் என்று எதுவும் தெரியாதாம்.
    
மகப்பேறு மருத்துவர் ஒருவர் 'மீடியேட்" செய்ய, நம்ம காலனியில் அரங்கேறி இருக்கிறது இந்த புது விசேஷம். காலனிக்கே திருஷ்டி பட்டார்போல ஆகிடுச்சு இந்த விஷயம். ஏதோ பணக்கஷ்டம், பூர்விக வீட்டை ஜப்தியில் இருந்து மீட்கணும்னு தானே வாசு அங்கே போய் உழைச்சு உருகறான்? இவளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? போதாததற்கு இவளோட மாமியார் வேற இந்த புண்யவதியை தங்கத் தட்டில் தாங்காத
குறையா தாங்கறார்!
எதை வேணும்னாலும் இரவல் தரலாம்; ஒரு குடும்பப் பெண் தன் கருவறையை வாடகைக்கு தரலாமா? கலி முத்திப் போச்சு. வேறென்ன சொல்ல?" என்று பெருமூச்சுடன் முடித்துக்கொண்டாள் அலமு.

மழையடித்து ஓய்ந்தது போல் நிசப்தம் ஒன்று நிலவ, மகள் சுபத்ராவின் நினைவுகளில் மூழ்கிப் போனால் சிவகாமி. 
திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் வாழச் சென்ற மகளின் கருப்பைக்கு ஒரு குழந்தையை தாங்குமளவு வலுவில்லை எனத் தெரிந்ததும் மாப்பிள்ளை அஸ்வினின் யோசனைப்படி சென்னை வந்து டாக்டர் மரகதத்தை பார்த்ததும், அவர் மூலம் முகம் கூட தெரியாத ஒரு புண்யவதியின் வயிற்றில் இவர்களது குலவித்து சூல்கொண்டு வளர்ந்ததும், அந்த முருகப்பெருமானே வந்து பிறந்ததாக எண்ணி பேரன்
கார்த்திக்கை இன்று வீடே கொண்டாடுவதுமாக நிகழ்வுகள் சில நொடிகளில் நிழல்களாக ஓடின.

நிலவிய மௌனத்தை கலைத்து பேசலானாள் சிவகாமி.
"ரொம்ப ஈஸியா அந்த பெண்ணை 'திருஷ்டி'ன்னு சொல்லிட்டே அலமு. ஆனால் ஒரு பெண் இது போன்ற விஷயத்திற்கு இசைவது அவ்வளவு சுலபம் இல்லை. 

பிரசவம்ங்கறது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவின்னு சொல்றோமே, அதை பிரத்யேகமா தன் வம்ச விருத்திக்கு மட்டுமே ஒதுக்காமல், மனமுவந்து யார் வம்சக் கொடியையோ தாங்கிப் பிடித்திருக்கும் அந்த பெண், அந்த சிசுவோட தாய் தகப்பனை பொறுத்தவரையில் அவங்களை வாழ வைக்க வந்த குலதெய்வம்.

ரத்னச் சுருக்கமா சொல்லணும்னா, மாற்றான் வம்ச வித்தை தாங்கி காத்து தரும் அந்த மைதிலி, என்னை பொறுத்தவரையில் 
சாக்ஷாத் அந்த திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகையோட அம்சமே தான்." மளமளவென்று பேசிவிட்டு கையூன்றி எழுந்து கொண்டாள் சிவகாமி.

அதற்கென்றே காத்திருந்தாற்போல் ஆலயமணி கணீரென்று மும்முறை ஒலித்து அவளது வார்த்தைகளை ஆமோதித்தது.

Comments