யதார்த்தங்களின் நாயகன்.

இது சற்றே தாமதமான பதிவு என்றாலும் என் உளமார்ந்த பதிவு.
புத்தகங்களும் திரைப்படங்களும் அதிக ஆதிக்கம் செலுத்திய மனச்சூழல் என்னுடையது. அந்த வகையில் யாரோ ஒருவரின் மரணம் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத ஓர் இழப்பு திரைச்சிற்பி பாலு மகேந்திராவின் மறைவு.

பாலு மகேந்திராவின் அறிமுகம் முதன்முறையாக 1998 சன் டிவி'யில் ஒரு முன்னிரவு வேளையில் 'மூடுபனி' திரைப்படம் பார்த்த போது கிடைத்தது. அதற்கு முன்பே 'மூன்றாம் பிறை' பல முறை கண்டிருந்தும் இயக்குனர் என்ற சிம்மாசனத்தின் அதிகாரம் புரிந்த பின்னே பார்த்த முதல் சில படங்களில் ஒன்றாக 'மூடுபனி' அமைந்தது. அன்றிலிருந்து பாலு மகேந்திரா படம் என்றாலே அதில் ஏதோ ஒரு அசாத்தியத்தை எதிர்பார்க்கும் ஒரு வழக்கம் ஒட்டிக் கொண்டது.

வளர வளர சில நுணுக்கங்கள் அவரது திரைப்படங்களில் பிடிப்பட்டன.
குறைந்த கதைமாந்தர்களை கொண்ட ஆழமான கதைச் சூழலுக்குள் 3 மணிநேரம் கட்டுண்டு கிடந்த காலங்கள் அவை. நிறைய படங்களில் கதைக்களம் நிகழும் ஊரும் அங்கு நிலவும் பருவச் சூழலும், இளையராஜாவின் இசையும், சில நேரங்களில் நிசப்தமும் கூட உயிருள்ள கதாபாத்திரங்களாகவே பட்டன.

என்னை முக்கியமாக ஈர்த்த விஷயம் பாலு மகேந்திராவின் கதைநாயகி தேர்வு.
கதையோட்டதோடு ஒன்றிப் போகும் வேளையில் தேவதைகளாய் மிளிரும் பெண்கள் அவர்கள். 

மூடுபனியில் ஷோபா.
'மறுபடியும்' ரேவதி. மற்றும் ரோகினி.
'அது ஒரு கனாக்காலம்' ப்ரியாமணி.
'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவி. சில்க் ஸ்மிதா.
ஏன், சதிலீலாவதி கல்பனாவும் தான்.

டூயட் பாடல் அழகிகளாக வந்து போகாமல் புற அழகையும் மீறிய தீர்க்கமான குணசித்திர அமைப்புடைய, உறுதியான, யதார்த்தமான, ஆழமான கதைபாத்திரங்களாக பாலு மகேந்திராவின் கதைநாயகிகள் அமைந்திருப்பார்கள். இதில் 'மறுபடியும்' ரேவதி மற்றும் 'சதிலீலாவதி' கல்பனா என்னுடைய ஆதர்ச கதாபாத்திரங்கள்.

மாநிறமான கருநிறமான பெண்களின் அழகை பாலு மகேந்திராவை போல் தமிழ் சினிமாவில் கொண்டாடியவர்கள் மிகச் சிலரே.
இதற்கு 'வீடு' படத்தில் வரும் அர்ச்சனாவின் ஒப்பனையில்லாத இயற்கையான  எழிலின் பதிவு ஒன்றே போதும். 

சில நாட்களுக்கு முன் விஜய் டிவி 'நீயா நானா' நிகழ்ச்சியில் "கருநிறமுடைய மற்றும் மாநிறமுடைய பெண்களே எனக்கு அழகிகளாக படுகிறார்கள்" என்று ஸ்திரமாக தன் கருத்தினை அவர் முன்வைத்த பொழுது முன்பை விடவும் அவரை அதிகமாக பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை.

ஆனந்த விகடனில் அவரது 'சினிமா பட்டறை'யை பற்றி படித்த போது ஒரு முறையேனும் அவ்விடம் சென்று பார்த்துவிட்டாவது வரவேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாய் ஆசைப்பட்டது உண்டு.

வெற்றிமாறன், 'கற்றது தமிழ்' ராம் ஆகிய இருவரின் படைப்புகளும் முன்பே மிகவும் பிடித்திருந்தாலும், அவர்களின் விளைநிலம் பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' என்றறிந்த பின் அவர்கள் மீதான அபிமானமும் எதிர்பார்ப்பும் மேலும் உயர்ந்தன. இதுவே  பாலு மகேந்திரா என்ற மனிதரின் தனித்தன்மைக்கான முத்திரை.

இன்னும் 'தலைமுறைகள்' திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. நிச்சயமாக அது அவரது இறுதி படைப்பாக இருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. 

ஒரு முறையேனும் அவரது அறிமுகம் கிடைக்கவேண்டும் என்று நினைத்த நான் பார்த்தது, கடந்த வெள்ளிக்கிழமை, மாங்காடு கோயில் சென்று வீடு திரும்பும் மதிய வேளையில், எதிர்பாராத விதமாக, வளசரவாக்கம் மின்மயான வாசலில் அவரது இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட மலர் அலங்கார நாற்காலியை மட்டுமே.

அந்த நாற்காலியின் இறுதி தரிசனம் ஓர் இயக்குனராக பாலு மகேந்திரா கோலோய்ச்சிய சிம்மாசனத்தையே எனக்கு நினைவுப்படுத்துகிறது. 
இனியும் நினைவுப்படுத்தும்.
4 comments