"அம்முணி"

மெல்ல நடந்து வந்து கதவிடுக்கின் வழியாக அம்மாவை எட்டிப் பார்த்தாள் நிலா.
சற்றே நகர்ந்த போது "களக் சலக்" என்று சின்னதாய் சிணுங்கிய புது கொலுசு இவள் "உஷ்" என்று முறைத்து பார்த்ததும் நிறுத்தி கொண்டது.

காதுகளில் எதுவுமே விழாதது போல் தலைக்கு கையை வைத்து கொண்டு ஒருக்களித்து படுத்திருந்த அம்மாவிடம் எந்த சலனமும் இல்லை. தனக்கு தானே லேசாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்து கொண்டிருந்த சத்தத்தை வைத்து அம்மா இன்னும் உறங்கவில்லை என்பது ஊர்ஜிதமாயிற்று.

எட்டே அடிகள் எடுத்து வைத்து ஓடினால் அம்மாவின் கைக்குள்ளே கட்டுண்டு வெதுவெதுப்பான அவளது மூச்சு காற்றில் மூன்றே நிமிடங்களில் சொர்க்கம் போன்று உறங்கிப் போய் விடலாம். ஆனால் அம்மா மீது மகளுக்கு இருந்த பிள்ளைக் கோபமும் அதோடு ஒட்டிக் கொண்டிருந்த வைராக்கியமும் கரைந்து விடுமே!

மூன்றாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் நிலாவுக்கும் அவள் அம்மாவிற்கும் சண்டை. அடிக்காது நடக்கும் செல்ல சண்டைகளின் வகையறா தான் என்ற போதிலும் இன்று சற்று அழுத்தமாகவே அமைந்து போனது நிலாவின் கோபம்.
...................................................
நிலாவின் கோபத்திற்கும் சோகத்திற்கும் பின்னணி...அம்முணி! அம்முணியை நினைத்த போதே நிலாவுக்கு மீண்டும் தொண்டையை அடைத்து கொண்டு அழுகை வந்தது. எச்சில் விழுங்கி நீண்டதோர் பெருமூச்சிற்குள் வந்த கண்ணீருக்கு தற்காலிக அணை போட்டுக் கொண்டாள்.

கூடப் படிக்கும் சுலைமான் அன்று மதியம் Science Classல் நிலா பொக்கிஷமாய் பாதுகாத்து வந்த அம்முணியை விழுங்கியதில் தொடங்கியது எல்லாம்.

முதலாம் வகுப்பில் தொடர்ந்து அனைத்து தேர்வுகளிலும் First Rank வாங்கியதற்காக செண்பகம் மிஸ் கொடுத்த பிங்க் கலர் பூ போட்ட Camlin பென்சிலின் பின்னால் ஓட்டிப் பிறந்த பிங்க் கலர் ரப்பர் பெண் அம்முணி.

ஏதோ ஒரு நாள் தீவிர சிந்தனையில் லயித்து போன நிலாவின் வாயில் கடிபட்டதால் பென்சிலும் ரப்பரும் பிளவு படவே அந்த 'மொழுக்' பிங்க் ரப்பருக்கு கண், காது, மூக்கு வரைந்து "அம்முணி" என்று பெயர்சூட்டு விழா நடத்தி நிலாவை தேற்றிய அதே அம்மா, இன்று...
.......................................                                                                                    
அழகுக் கலரில் பபிள் கம் போன்று பார்த்தாலே கடிக்க தூண்டும் அம்முணி, Science  நோட்டை எடுக்க நிலாவின் தலை School bagஇன் உள்ளே நுழைந்த நேரம் சுலைமானின் குட்டிக் கண்களில் பட்டு ஆசையை நா வழியாக ஊற விட்டது. நோட்டை எடுத்த நிலா நிமிரவும் சுலைமான் அம்முணியை வாயில் போடவும் சரியாக போகவே "ஆஆ....வ்வ்வ்" என்ற நிலாவின் திடீர் கதறலில் ஒரேயடியாக விழுங்கப்பட்டிருந்தது அம்முணி!

ஒரு வழியாக அழுது கொண்டிருந்த ரெண்டு பிள்ளைகளிடமும் கதை கேட்டறிந்த எழில் மிஸ் சுலைமானை டாக்டரிடம் அழைத்து செல்ல, அடுத்த இரண்டு மணிநேரமும் அழுது அழுதே உப்பிப் போயின நிலாவின் பூரிக் கன்னங்கள்.
.........................................
நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்ட அம்மா ஸ்கூல் வேனிலிருந்து அழைத்துக் கொள்ள வரும்போதே மீண்டும் பீறிட்டது சற்று நேரம் அடங்கிப் போன நிலாவின் அழுகை.

விம்மலும் கண்ணீருமாக சுலைமானால் அம்முணிக்கு நேர்ந்த கதியை அம்மாவிடம் வில்லு பாட்டாக பாடி முடித்தாள் நிலா. ரப்பர் தின்ற பிள்ளை என்ன ஆனானோ என்று உள்ளூர பதறினாலும், ஏதோ இராவணன் சீதையை தூக்கிச் சென்றாற்போல் அம்முணிக்காக கலங்கும் அவள் வயிற்றுக் கண்ணகியாய் நின்ற ஏழு வயது மகளின் வெகுளி அம்மாவுக்கு கிச்சு கிச்சு மூட்டவே செய்தது.

அடக்க முடியாத அம்மாவின் திடீர் சிரிப்பு அழுது கொண்டிருந்த நிலாவுக்கு மேலும் கோபமூட்டவே, "ஐ ஹேட் யூ அம்மா....நீ அம்முணிக்காக கவலை படவே இல்லை...என் மேலேயும் பிரியமே இல்லை...மரம் மாதிரி வளர்ந்து குண்டு குண்டா ஆன போதிலும் உனக்கு மண்டைல Brain  இல்லை...என் கிட்ட பேசவே பேசாதே போ!" என்று கத்திக் கொண்டிருக்கும் போதே முகம் மாறிய அம்மா உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.
....................................................
அம்மா உள்ளே போய் பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டது. பருவத்தே வெடித்த இலவம்பஞ்சை சிதறச் செய்யும் காற்றை போல் வீட்டுக்குள் பரவிகிடந்த சண்டைச்சூழலை கலைக்க முனைந்தது "அம்மா..." என்று நெஞ்சுக்குள் ஏங்கிய பிள்ளை நிலவின் பாசம்..
மனது கேட்காமல், மெல்ல நடந்து வந்து கதவிடுக்கின் வழியாக அம்மாவை எட்டிப் பார்த்தாள் நிலா.

செல்லப்பிள்ளை மறைந்து பார்க்கும் மர்மத்தை கொலுசுமணி ஓசை காதில் சொன்னபோதிலும் பிள்ளைக் குறும்போடு ஓரிரண்டு நிமிடம் ஏதும் நடவாதது போல் படுத்திருந்த அம்மா, மீண்டும் தாய்மை அடைந்து மீண்டவளாய் "யார் அது கதவு கிட்ட? என் நிலா குட்டியா?" என்று சமரச போர்வை இழைத்தாள்.

"ஆமா. நான் தான்" என்று ஹீனஸ்வரத்தில் பதில் தந்த கதவிடுக்கு பிறைநிலவு முழுநிலவாய் அறைக்குள் அடி வைக்க, "அம்மா இப்போ ஒன், டூ, த்ரீ  சொல்வேனாம்...த்ரீ சொல்றதுக்குள்ள என் பட்டுகுட்டி அம்மா கிட்ட வந்துடுவாளாம்...சொல்ல போறேன்... ஒன்.." என்று சொல்லி முடிப்பதற்குள் அம்மாவின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்து அம்முணியின் பிங்க் நிறக் கனவுகள் தோன்ற உறங்கிப் போனது பிள்ளை மலர்.
:)

Comments

Popular posts from this blog

Confessions of a Sleepless Mortal Mind.

Can't really deduce where I'm heading........

To the flawed and the fabulous.