எந்நாட்டவர்க்கும் ....

சுடலைக் காட்டு பித்தன் அவன்
வெண்ணீறு பூசிச்
சாத்திரங் காட்டி ஆடுகிறான்.
நாடு பரவி 
காடும் கண்டாடும் 
சிற்சபை ஆடிய பாதங்கள் பரப்புது
தீம் தீம் திமி எனும்
தீரா ரீங்காரவொலி.

ஓரிரவு இடுகாட்டில்
ஆடின ஆட்டங் கண்டு
வீழ்ந்த மனமது தேடும் சுவடுகள்...
சாம்பல் மணம்
தலைநீர் பொழிய
கிடை ஏறு முத்தன்
அவனை கண்ட விழி
வேறேதும் கண்கொளுமோ?
ஒருபொழுதும் அவன் நினைவறுமோ?

நாடிதொடும் ஜீவப்புனல்
கரைகிறது
வெண்ணீற்று புகைதனிலே...
நாடி வரும் நினைவில் அவன்
பிறைநுதலோ பிறைநகையோ 
தேடி அலையும் அந்த ஒரு ஆதாரப்  பொழுதினிலே
நீறு தந்து புனல்வழிய
மோன ஸ்வரமென
இனங்காட்டி நடம்புரியும் வேளின் 
சிகையினின்று  வீழ்ந்த கொன்றை இதழ் 
சூடி மனம் இங்கு
வேட்கை பருகிப் பிழைக்குதம்மா!
2 comments