இதயங்களின் collateral damage

மண்டியிட்டு தொழும் அன்வர் பாய்
வேறெதெற்கும் மண்டியிடுவதில்லை
பேரப் பிள்ளைகளை அம்பாரி சுமக்கும்
தருணங்கள் மாத்திரம் விதிவிலக்கு.
நாள் தவறாமல்
மதியம் மூன்று மணிக்கு
பைபாஸ் ரோட்டின் வலப்புறம் அணைந்த
குண்டம்மா கடையில்
கப்பைவத்தல் வாங்கிக் கொள்கிறார்
கொறிப்பதுமில்லை
கொடுப்பதுமில்லை
நிலைக்கும் பார்வை
எதிர் நிற்கும் பசும்பொன்னார் சிலைமேல்.
பெரும்புழுதி கிளம்பவரும்
பெரியகுளத்து பேருந்தின் இரைச்சல்
மட்டுமே சலனம் செய்யும் சாவி.

தேவர் சிலையொட்டி
நிற்கும் ஊர்தி நோக்கி ஊர்ந்து
இறங்கும் முதிய முகம் தோறும் அலசல்-
நிற்க. முன்கதை இதோ.
ஆண்டு எழுபத்தி ஆறாகிறது
ஆருயிர் தோஸ்த்
ரஹீம்
வங்கதேயம் சென்று.
பிழைப்பு தேடி பெயர்ந்தவன்
வாக்கு ஒன்று தந்திருக்கிறான்
பிரிந்த
அதே இடம் அதே வேளையில்
என்றேனும் மீண்டு
நட்பை மீட்டு காலம் கைப்பற்றி
சிறுவர்களாய் தொலையலாம் என.

பாவம் அன்வர் பாய்
சேதி அறியவில்லை
அடர்ந்த அவரது வெள்ளைரோமங்கள்
காதுக்கு வேலிசெய்கின்றன
முதியவரினின்று உண்மையை போர்த்தி மூடும் நரைகளின் கருணை
ரஹீம் பாயின் காலுக்கடியில் இருந்து நழுவிப்போன மண்ணின் உரிமை
அவருக்கு தெரிய வாய்ப்பில்லை
ரஹீம் பாய் வாயில் மண்
கப்பை வத்தல்களுக்கு அங்கே இடமிருக்கப் போவதில்லை

யாரும் அன்வர் பாயிடம் கூறாதீர்கள்
இன்னும் சில நாட்கள் இருக்கட்டும்
அவரது இதயத்துடிப்பும்
குண்டம்மா கடை வியாபாரமும்.

Comments

Popular posts from this blog

Confessions of a Sleepless Mortal Mind.

20 years of Alaipayuthey, it is!

Vaaranam Aayiram